நாடாளுமன்ற மக்களவையின் 17வது சபாநாயகராக பாரதிய ஜனதாவை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாகிறார்
ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை, சபாநாயகர் வேட்பாளராக பாஜக முன் மொழிந்தது. அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத YSR காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் வழிமொழிந்தன. இதையடுத்து, ஓம் பிர்லா இன்று காலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கான அவகாசம் முடிந்ததால், அவர் போட்டியின்றி தேர்வாகிறார். ஆனால், மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார், இதை முறைப்படி நாளை மக்களவையில் அறிவிப்பார். அதன்பிறகே, ஓம் பிர்லா முறைப்படி சபாநாயகராக பொறுப்பேற்பார்.
இதனிடையே, மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில்மட்டுமே வெற்றிபெற்றது. கடந்த முறையை காட்டிலும் 8 இடங்கள் அதிகம் பெற்றிருந்தாலும், மக்களவை எதிர்கட்சி அந்தஸ்திற்கு தேவையான 10-ல் ஒரு பங்கு இடத்தை அதாவது 55 இடங்களை காங்கிரஸ் கட்சியால் பெற முடியவிலை. இதனால் தொடந்து இரண்டாவது முறையாக மக்களவை எதிர்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. இந்நிலையில், மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மேற்கு வங்க மாநிலத்தின் பெர்ஹாம்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.