திங்கள், 17 ஜூன், 2019

கோடை வெயிலில் குழம்பிப் போய் உள்ளார் ; பொன்.ராதாகிருஷ்ணனை சாடும் பாலகிருஷ்ணன்! June 17, 2019


முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன், கோடை வெயிலில் குழம்பி போய் உள்ளதாக காட்டமாக சாடியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக அளவில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்த பாஜக சுமார் 5 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வியை தழுவியது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் தோல்வியடைந்தார்.
தாம் தோல்வியடைந்த நிலையில், தமிழகத்தில் விவசாய கடன்களையும், கல்வி கடன்களையும் ரத்து செய்வோமென திமுக உள்ளிட்ட அவர்களின் கூட்டணி கட்சியினர் தெரிவித்திருந்தனர். இப்போது அவர்கள் 37 இடங்களில் வென்று மக்களவைக்கு செல்கின்றனர். எனவே, அவர்கள் அளித்த வாக்குறுதியின் படி, தமது சொத்துக்களை விற்றாவது, இன்னும் 6 மாத காலத்திற்குள்ளாக தமிழக மக்களின் கல்வி - விவசாய கடன்களை அடைத்திட வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர், முதலில் அவரது சொத்துக்களை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்கட்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பதிலளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "வெற்றியடைந்தவர்கள் தங்களது சொத்துக்களை விற்று வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாதமே அபத்தமானது. எதிர்க்கட்சிகள் கொடுக்க வேண்டுமென்றால் அரசு என்ன செய்யுமென" காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் பாலகிருஷ்ணன்.