ஞாயிறு, 23 ஜூன், 2019

சட்டம் படிக்கும் முன்னே வழக்கறிஞராக உருவெடுத்துள்ள தன்னம்பிக்கை பெண்...! June 23, 2019

Authors
Image
சட்டம் படிக்கும் முன்னே சட்டப்போராட்டம் நடத்தி வழக்கறிஞராக உருவெடுத்திருக்கிறார் சக்கரநாற்காலியில் வலம் வரும் தன்னம்பிக்கை பெண் ஒருவர்.
பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் உம்மூல் ஹார். இவரால் இயல்பான மனிதர்கள் போல் இயங்க முடியாது. இவர் குழந்தையாக இருக்கும் போதே "செரிபெரல் பலாஷி" என்ற மூளை பக்கவாத நோய்க்கு ஆளானதே அதற்கு காரணம். இத்தகைய பாதிப்புடையவர்களால் எழுந்து நிற்கவோ மற்றவர்கள் போல் இயல்பாக நடக்கவோ முடியாது. எதையும் நினைவில் வைத்திருப்பது சிரமமான காரியம் என்பதோடு மறதி என்பது அதிகமாக இருக்கும். சக்கர நாற்காலி மட்டும் தான் அவரின் சுக துக்கங்கள் என அனைத்திலும் உடன் இருக்கும் ஒரே நண்பன். 
 
இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கான வசதிகள் சாதாரண பள்ளிகளில் இதுவரை இல்லாத நிலையில் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் கழிவறை, போக்குவரத்து, மனிதர்களின் அலட்சியம் என அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து தேசிய திறந்தநிலை பல்கலைகழகத்தில் தன்னுடைய கல்வியை முடித்தார். ஆனால் திறந்தநிலை பல்கலைகழகத்தில் படித்ததால் சட்டக்கல்லூரியில் சேர முடியாது என தெரிவிக்கப்பட்டது. 
 
நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கேயும் கட்டடங்களில் ஏறி இறங்க முடியாமல், கழிவறைகளுக்கு செல்ல முடியாமல், உரிய நேரத்திற்கு வகுப்பிற்கு செல்ல முடியாமல் என அனைத்து துயரங்களையும் அனுபவித்து கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை போராடி வெற்றிகரமாக தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். 
 
பெரும் பேராட்டத்திற்கு பின்னர் வழக்கறிஞரான இவர், வரும் காலங்களில் தன்னை போன்று பாதிப்புடையவர்களின்  கல்வி, வேலைவாய்ப்பு என உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் குரல் எழுப்ப இருப்பதாக தெரிவிக்கிறார். இவ்வாறு சக்கர நாற்காலியில் சக்கரமாய் சுழன்று பல சட்ட போராட்டங்களை நடத்தி சட்ட படிப்பை முடித்த இந்த சாதனை பெண், தன்னம்பிக்கையின் பிறப்பிடம் என்றால் மிகையாகாது.