வெள்ளி, 21 ஜூன், 2019

2017ம் ஆண்டில் 8,00,000 சிசுக்கள் இந்தியாவில் இறந்திருக்கின்றன - மருத்துவர் கஃபீல்கான் பகீர் June 21, 2019

Authors
Image
பீகாரில் கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் encephalitis எனப்படும் மூளையில் ஏற்படும் வீக்கம் காரணமாக  இறந்திருக்கிறார்கள்.  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம்  மற்ற மாநிலங்களை பீதியில்  ஆழ்த்தியிருக்கிறது. இதே போன்று  கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேச  மாநிலத்திலும் குழந்தைகள்  encephalitis எனப்படும்  மூளையில் ஏற்படும் வீக்கம்  காரணமாக பிஆர்டி மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்டனர். சிகிச்சைப் பெற்றுவந்த குழந்தைகள் 70க்கும் மேற்பட்டோர் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பரிதாபமாக  உயிரிழந்தனர். அப்போது அந்த  மருத்துவமனையின் நோடல்  ஆபிஸராக இருந்த டாக்டர் கபீல்  கான் தான் இதற்கு காரணம் என்று  குற்றம் சாட்டிய யோகி ஆதித்யநாத்  தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு அவரை  கிட்டத்தட்ட 7 மாதங்கள் சிறையில்  வைத்தது.  பின்னர்,   சரிவர ஆக்ஸிஜன்  சிலிண்டர்களை மருத்துவமனைக்கு  விநியோகிக்கவில்லை என்று அரசே  ஒத்துக்கொண்டது தனி கதை. உத்தரப்பிரதேச அரசு சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால், அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று விடுக்கப்பட்ட  டாக்டர் கபீல்கான் தான்  தற்போது பீகாரின் முசாஃபர்பூரில்  தனது மருத்துவக் குழுவுடன் சுழன்று  கொண்டிருக்கிறார்.

அவரிடம் ஹஃபிங்டன்போஸ்ட்  இந்தியா நடத்திய நேர்காணலின்  தமிழாக்கம்.

மரு.கஃபீல் கான்: நாங்கள் முசாஃபர்பூர்  மருத்துவமனைகளில் வேலை  பார்க்கவில்லை; நோயாளிகளுக்கு  சிகிச்சையளிக்கவில்லை. மாறாக  எங்கெல்லாம் கடுமையாக நோய் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த  பகுதிகளில் சென்று, யாருக்கெல்லாம்   நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறது  என்று ஆராய்ந்து அவர்களை  உடனடியாக பரிசோதனைக்கு  உட்படுத்துகிறோம். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்  படி இறந்தோர் எண்ணிக்கை 108  என்றாலும் ஆனால், எனது  அனுபவத்தில் உண்மையான  எண்ணிக்கை 108ஐ தாண்டும்.
2017ல் கோரக்பூரில் நடந்ததற்கும்  தற்போது முசாஃபர்பூரில் நடந்து  கொண்டிருப்பதற்கும் இடையில்  என்னென்ன ஒற்றுமையை  காண்கிறீர்கள்?

நோயும், அறிகுறிகளும் ஏறக்குறைய  ஒன்றாகவே இருக்கிறது. கோரக்பூரில்  குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு  காரணம் Japanese  Encephalitis virus  என்பதை கண்டுபிடிக்கமுடிந்தது.  ஆனால் முசாஃபர்பூரில் அதை  கண்டுபிடிக்கமுடியவில்லை. மூளை  வீக்க நோய்க்கு மருத்துவம் இல்லை,  அறிகுறிகளுக்கு ஏற்பவே சிகிச்சை  அளிக்கப்படுகிறது. எனவே, ஒரு  குழந்தைக்கு காய்ச்சல் வந்தால்  நாங்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை  அளிப்போம். வலிப்பு நோய் வந்தால்  வலிப்பு நோய்க்கு சிகிச்சை  அளிப்போம். அளவுக்கு அதிகமாக  நோயாளிகள் வரும்போது அதை  சமாளிக்க மருத்துவமனைகளில்  போதிய வசதிகள் இல்லாவிட்டால்  குழப்பம் ஏற்படுவதோடு,  சூழ்நிலையை சமாளிக்கவும்  கடினமாகிவிடும். அதுதான் தற்போது  முசாஃபர்பூரில்  நடந்துகொண்டிருக்கிறது.
ஏன் ஏழைக் குழந்தைகள் மட்டும்  இந்த நோயால் மிக மோசமாக  பாதிக்கப்படுகிறார்கள்?

யாரெல்லாம்  இதுபோன்ற நோய்களால் மிக மோசமாக  பாதிக்கப்படுகிறார்கள் என்று  நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஐந்து  முக்கியமான காரணங்கள்  கண்டறியப்பட்டது. சுகாதாரமற்ற  குடிநீர், மோசமான சுகாதாரம்,  ஊட்டச்சத்து குறைபாடு,  இடநெருக்கடி, சுகாதாரமற்ற உணவு  ஆகியவைதான் ஏழைகளை நோய்கள்  கடுமையாக தாக்குவதற்கு  முக்கியமான காரணங்களாகும். ஒரு  சிறிய அறையில் 5-6 பேர் வசிப்பது  நிச்சயம் சுகாதாரக்குறைவை  ஏற்படுத்தும். அதோடு, குறைவாக  உணவை உட்கொள்வது அவர்களது  எதிர்ப்பு சக்தியை மிகவும் பாதிக்கும்.  கோரக்பூரில் ஏற்பட்ட Japanese  Encephalitis கொசுக்கள்  மூலம் பரவியது தானே?. கொசுக்கள்  ஏழை குழந்தைகள், பணக்கார  குழந்தைகள் என்று பார்த்தெல்லாம்  கடிப்பதில்லை. ஆனால் ஏன் ஏழை  குழந்தைகள் மட்டும் இறக்கிறார்கள்?  ஏனெனில் மேற்சொன்ன காரணங்கள்  தான் இவர்களது நிலையை  மோசமாக்குகிறது. மேலும், நோயின்  தீவிரம் அதிகமானதும் தான்  மருத்துவமனையை அந்த மக்கள் நாடுகிறார்கள்.  குழந்தைகளின் பெற்றோர்கள் அதை  பெருதாக எடுத்துக் கொள்வதில்லை  அல்லது அவர்களால் அதை  புரிந்துகொள்ள முடிவதில்லை.  Encephalitis யாரெல்லாம்  வறுமையில் இருக்கிறாகளோ  அவர்களை பாதிக்கும் நோய்.

தடுப்பூசிகள் என்ன ஆனது?

ஆமாம், அதைதான் நான் அரசிடம்  கேட்க விரும்புகிறேன். தடுப்பூசிகள் என்ன  ஆனது? உலக சுகாதார நிறுவனம்  encephalitis தடுப்பூசியை  இலவசமாக கடந்த 25 ஆண்டுகளாக  வழங்கி வருகிறது. அப்படியிருந்தும்  எப்படி இவ்வளவு பேர்  பாதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி  முகாம்கள் எவ்வளவு பேரைச்  சென்றடைகிறது என்பது  கேள்விக்குறியது. encephalitis   நோயால் பாதிக்கப்பட்டு கடந்த  வருடம் கூட உத்தரபிரதேசத்தில்  மக்கள் இறந்திருக்கிறார்கள். அதுவும்  ஏழை மக்கள் தான் இறந்தார்கள்.  ஏனெனில், மற்றவர்கள் தனியார்  மருத்துவமனைகள் மற்றும்  க்ளினிக்குகளில் தடுப்பூசிகளை பணம்  கொடுத்துப் பெற்றுக்கொள்கிறார்கள்.  அந்த தடுப்பூசிகள் கிட்டத்தட்ட 1200  ரூபாய்கள் வரும். நாட்டில் வசிக்கும்  ஏழை மக்களால் அந்த தொகையை  கொடுக்க முடியாது. எனவே தான்,   அரசு கொடுக்கும் இலவச  தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள்.  அது அவர்களிடம் எப்போதும் சென்று  சேர்வதில்லை.
ஏன் இப்படி ஒரு சில குறிப்பிட்ட  பகுதிகள் மட்டும் அதிகம்  பாதிக்கப்படுகிறது?

பல திடீர் பரபரப்பெல்லாம்  ஊடகங்கள் ஏற்படுத்துவதை பொருத்தது. ஜூன் மற்றும் ஜூலை  மாதங்களில், கேரளா, மேற்கு வங்கம்,  ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம்,  உத்தரபிரதேசம் மாநிலங்கள்  உள்ளிட்ட பல மாநிலங்கள்  encephalitis யால்  பாதிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும்  குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்  இந்த நோயால் ஆண்டு தோறும்  குறிப்பிடத்தகுந்த அளவில்  இறக்கின்றனர். எப்போது ஒரே  மருத்துவமனையில் அதிக அளவில்  இறக்கிறார்களோ அப்போது அது  தலைப்புச் செய்தியாகிறது.

ஏன் அதிகப்படியான  encephalitis பாதிப்புகள்  சமாளிக்க கடினமானவையாக  இருக்கின்றன?

103 பேர் இறந்திருப்பதாக பீகார் அரசு  அதிகாரப்பூர்வமாக  அறிவித்திருக்கிறது. ஆனால்  சுகாதாரப்பணியாளர்கள் மற்றும்  மருத்துவக் குழுக்களிடம் பேசி  அறிந்துகொண்ட வரையில்  இறந்தவர்கள் எண்ணிக்கை 300ஐத்  தொடும். மருத்துவமனைக்கு  குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவோ,  சுகாதார நிலையங்களுக்கு  செல்வதற்குள்ளாகவோ  குழந்தைகளும், பொதுமக்களும்  இறந்துவிடுகிறார்கள்.
இது போன்று அதிகம் பேர்  பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் அரசு  முற்றிலும் தயாராக இருப்பதில்லை.  முசாஃபர்பூரில் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க போதிய அளவில்  மருத்துவர்கள் இல்லாததை  கண்கூடாக பார்க்க முடிகிறது.  அதோடு செவிலியர்கள்  பற்றாக்குறையும் இருக்கிறது.  பொதுவாக 4 நோயாளிகளுக்கு ஒரு  மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.  ஆனால் இங்கு 50 அல்லது அதற்கு  மேற்பட்டோருக்கு ஒரு மருத்துவர்  சிகிச்சை அளிக்கிறார். அதோடு  மருந்து பொருட்கள் பற்றாக்குறையும்  எப்போதும் இருக்கிறது.  அடிப்படையில் மருத்துவர்களும்  இல்லை, மருந்துகளும் இல்லை.  நான் இதே போன்ற ஒரு  சூழ்நிலையைதான் சதித்தேன்.  சூழ்நிலையை சமாளிக்கும் வழியை  தேடியதற்காக தண்டிக்கப்பட்டேன்.

encephalitis பற்றிய  செய்திகள் தலைப்புச் செய்திகளாவது  இது முதல்முறை அல்ல.  கோரக்பூரில் நடைபெற்றவை மிக  அதிகமாகவே அலசப்பட்டது. ஆனால்  இது போன்ற நீண்டகால  அச்சுறுத்தல்களுக்கு அரசுகள்  தயாராகாமல் எப்படி தவிர்க்க  முடியும்?

ஏனெனில் மோசமாக  பாதிக்கப்படுபவர்கள் அவர்களது ஓட்டு  வங்கியில் இல்லை. அவர்கள்  ஏழைகள்; அவர்கள் இறந்தால் யாரும்  கண்டுகொள்ளப்போவதில்லை.  அவர்களது குழந்தைகள் இறந்தால்   கூட, அவர்கள் சார்பாக அரசை  கேள்வி கேட்பதற்கு கூட  அவர்களிடம் ஆட்கள் இல்லை.  இந்தியாவின் அரசியல் திட்டத்தின்  படி அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு  எந்த விதமான பாதிப்புகளும்  இல்லாமல் புறக்கணிக்கப்படுவார்கள்.   நீங்கள் ஏழைகளாக இருந்தால்  உங்களை அரசியல் கட்சிகள் அதிகம்  பயன்படுத்திக்கொள்ளும்.

அடிப்படை சுகாதாரம் என்பது பல  வருடங்களாக நாட்டில் குப்பையில்  கிடக்கிறது. மருத்துவ நிலையங்கள்  போதிய உபகரணங்கள் மற்றும்  மருத்துவர்கள் இல்லாமல்  இயங்குகிறது. இவைகள் உயிர்களை  காப்பதற்கு கடினமானவையாகின்றன.
பிஆர்டி (BRD) மருத்துவமனை மோசமான காலகட்டத்தில் அரசிடமிருந்து உதவியை  எதிர்பார்த்தபோது சில  குற்றச்சாட்டுகள் உங்கள் மீது  வைக்கப்பட்டன. மருத்துவர்கள்  இதுபோன்ற பிரச்சனைகளை  சந்திக்கும்போது அவர்கள்  அரசுகளிடம் தீர்வுகளை கேட்கும்  அதிகாரம் எப்படி வரும்?

என்னால் என்ன சொல்ல முடியும்?  எனக்கு நேர்ந்த அவல நிலையை  நீங்கள் பார்த்தீர்கள். நிர்வாகத்  திறன்களுக்கு கீழ் நான் வேலை  பார்த்ததில்லை. எனவே உங்கள்  குரல் எந்த அளவிற்கு அரசு  நிர்வாகத்தையோ அல்லது  அதிகாரிகளையோ சென்று சேர்வது  எவ்வளவு எளிதானது அல்லது  கடினமானது என்று,  என்னால்  சொல்ல முடியாது. ஆனால் பொது  சுகாதரத்தின் மீது ஆழ்ந்த அரசியல்  அக்கறையின்மை இருக்கிறது.  உதாரணமாக, இப்போது நீங்கள்  மாதம் 15,000 ரூபாய்  சம்பாதிப்பவராகவும், ஒரு குடும்பமும் உங்களுக்கு  இருந்தால் நீங்கள் அரசு  மருத்துவமனைக்கு செல்ல  மாட்டீர்கள். தனியார்  மருத்துவமனைகளுக்கு தான்  செல்வீர்கள். வறுமையில்  இருப்பவர்கள் தான் அரசு  மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.  அவர்களுக்கு என்று எந்த குரல்களும்  கிடையாது, அவர்களுக்கு துணை  நிற்க எந்த சமூக அமைப்புகளும்  இல்லை. அதனால் குழந்தைகள்  இறப்புகள் நிகழ்ந்த பின்னும் அரசு,  மருத்துவமனைகளை புறக்கணித்து  மெத்தனமாக நடந்துகொள்கிறது  என்றே நினைக்கிறேன்.

மேலும், ஊழல் பிரச்சனையும் வேறு  எப்போதும் இருக்கிறது. புஷ்பா  சேல்ஸ்(கோரக்பூரில் ஆக்ஸிஜன்  சிலிண்டர்களை விநியோகிக்கும்  நிறுவனம்) நிறுவனத்தின்  உரிமையாளர் என்னோடு சிறையில்  இருந்தார். அவரிடம் சுகாதாரத்துறை  அமைச்சர் 10% கமிசன் கேட்டதாகவும்  அதை கொடுக்க இவர்  மறுத்துவிட்டதாகவும் என்னிடம்  கூறினார். அந்த அமைச்சர்  ஒத்துக்கொள்ளாததால் சிலிண்டர்கள்  விநியோகிக்கப்படவில்லை.

encephalitis நோயால் மட்டும்  கடந்த 40 வருடங்களில் 25,000  குழந்தைகள்  கோரக்பூரில்  உயிரிழந்திருக்கிறார்கள். நமது  அரசாங்கங்கள் என்ன செய்தது.  அவர்கள் இறந்த குழந்தைகளின்  குடும்பத்திற்கு 50000 ரூபாய் நஸ்ட  ஈடு கொடுத்தார்கள், தற்போது  உயிர்பிழைத்திருக்கும் குழந்தைகளின்  குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய்  கொடுக்கிறார்கள். ஏன்? ஏனெனில்  சில நேரங்களில் நோய்தாக்கத்தால்  உறுப்புகளை அவர்கள்  இழந்துவிடுகிறர்கள். தாய்மார்கள் தங்கள்  16-17வயது குழந்தைகளை தங்கள்  முதுகில் சுமந்து கொண்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு  கொண்டு வருவதை  பார்த்திருக்கிறேன். அவர்கள்  குழந்தையாய் இருந்தபோது  encephalitis நோயால்  பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவர்கள்.

2017ம் ஆண்டில் 8,00,000 சிசுக்கள்  இந்தியாவில் இறந்திருக்கின்றன.  அதாவது 2,200 குழந்தைகள்  தினந்தோறும் இறந்திருக்கின்றன.  மோடியின் அரசு இந்த தகவல்களை  வெளியிடவில்லை. ஆனால் ஐநா  வெளியிட்டது. உங்களது தடுப்பூசிகள்,  மருத்துவ திட்டங்கள் எல்லாம்  செயலில் இருக்கிறது என்றால்  இதெல்லாம் எப்படி நடந்தது?  அவர்களிடம் இதற்கு பதில்  இருக்கிறதா? இல்லை என்றே  நினைக்கின்றேன்.

உங்கள் மீது குற்றம் இல்லை என்று  தெளிவாக கூறப்பட்ட பின்னும் ஏன்  நீங்கள் இன்னும் பிஆர்டியில் நீங்கள்  வகித்த பதவியில் மீண்டும்  அமர்த்தப்படவில்லை?

உத்தரப்பிரதேச அரசால் எனக்கு  எதிராக ஒரே ஒரு ஆதாரத்தை கூட  சமர்ப்பிக்க முடியவில்லை எனக்கூறி  2018 ஏப்ரல் 25ம் தேதி என்னை  குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.  அவர்களால் என் மீதான மருத்துவ அலட்சிய குற்றச்சாட்டை நிரூபிக்க  முடியவில்லை. நீதிமன்றத் தீர்ப்பில்  ஆக்ஸிஜன் டெண்டருக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என்று  குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஏன்  அதிகாரிகள் என்னை மீண்டும்  பணியமர்த்தவில்லை என்று யோகி  ஜி தான் விளக்கவேண்டும்.  சஸ்பெண்ட் நடவடிக்கைகள் மீதான  எல்லா வேலைகளையும் மூன்று  மாதத்திற்குள்ளாக முடிக்கவேண்டும்  என்று யோகி அரசுக்கு இந்த ஆண்டு  மார்ச் 7ம் தேஹி அலகாபாத்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  நீதிமன்றம் குறிப்பிட்டதேதி ஜுன்7ம்  தேதியோடு முடிந்துவிட்டது.  தற்போது ஜுன் 20  நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை  உத்தரபிரதேச அரசு எனக்கு எந்த  தகவலையும் அளிக்கவில்லை.  

அவர்கள் மீண்டும் என்னை  பணியமர்த்தமாட்டார்கள் என்றே  நினைக்கிறேன். ஏனெனில்  அவர்களுக்கு சுகாதாரத்துறை  அமைச்சர் அஷுதோஷ் தண்டன்,  சித்தார்த் நாத் சிங்,  மருத்துவக்கல்வியின் டைரக்டர்  ஜெனரல் கேகே குப்தா மற்றும்  முதன்மைச்செயலாளர் ஆகியோரை  காப்பாற்றியாக வேண்டும். ஏனெனில்  அவர்கள்தான் செலுத்தப்படாமல்  இருக்கும் நிலுவைதொகை குறித்து  புஷ்பா நிறுவனம் 14 முறை  அனுப்பிய கடிதத்தைப் பெற்றவர்கள்.  ஆனால் ஊழல் மற்றும் 10% கமிஷன்  குற்றச்சாட்டுக்கும் நன்றி, அந்த  நிலுவைத் தொகை திரும்ப வராது.

நீதிமன்றம் உங்களை குற்றமற்றவர்  என்று அறிவித்தபின் அதிகாரிகள்  யாராவது பரிகாரம் செய்ய உங்களை  அனுகினார்களா?

இல்லை, ஒருவர் கூட இல்லை. நான்  சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தபோது   எனக்கான நிலுவையை செலுத்த  உத்தரப்பிரதேச அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்  இதுவரை ஒற்றை ரூபாய் கூட  எனக்கு கொடுக்கப்படவில்லை.  அவர்களுக்கு என்னை நிதி, மனம்  மற்றும் தொழில் ரீதியாக உடைக்க வேண்டும் என்பதே  எண்ணம்.

மேற்குவங்கத்தில் மருத்துவர்கள்  போராட்டத்தை பாஜக முன்னின்று  நடத்துகிறது. அது நேர்மையானது  என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அது நேர்மையானதெல்லாம் இல்லை.  அதனால் தான்  மேற்குவங்க  மருத்துவர்களோடும், மருத்துவ  பழகுனர்களோடும் இருக்கிறேன்  என்று நான் சொன்னேன். நடந்தது  கொடூரமானது. அதே நேரத்தில்  இந்தியா முழுவதும் அரசியலுக்காக இந்த விவகாரம் பயன்படுத்தப்படுவதை நான்  கண்டிக்கிறேன். நான் அதை  ஆதரிக்கவும்மாட்டேன்.
முசாபர்பூர் அல்லது கோரக்பூரில்  நடந்தவை போன்ற சூழ்நிலைகளின்  போது தோல்வியின் சுமையை  மருத்துவர்கள் தாங்க  வேண்டியிருக்கிறது. உங்களுக்கு  நிகழ்ந்ததைப் போன்றே செய்து  அரசுகளும் கடந்து செல்ல  முயற்சிக்கிறது. அரசு  மருத்துவர்களால் இதை எப்படி  நிவர்த்தி செய்ய முடியும்?
நான் முசாஃபர்பூரில் இருக்கிறேன்.  நேற்று ஸ்ரீகிருஷ்ணா  மருத்துவமனைக்குச் சென்றேன்.  அங்கே 200 நோயாளிகளுக்கு வெறும்  4 மருத்துவர்கள் மட்டும் தான்  இருந்தனர். நோயாளிகள் தரையில்  படுத்திருந்தனர். ஒரு படுக்கையில் 2-3  குழந்தைகள் படுக்க  வைக்கப்பட்டிருந்தனர். வெறும் 5  செவிலியர்கள் மட்டும் இருந்தனர்.  அதோடு மருந்துகள் பற்றாக்குறை  வேறு. எனவே, கோரக்பூராக  இருக்கட்டும், முசாஃபர்பூராக  இருக்கட்டும் குழந்தைகள்  நோய்களால் மட்டும் இறப்பதில்லை.  மனித ஆற்றல் குறைபாடு,  கட்டமைப்பு குறைபாடு,  உபகரணங்கள் குறைபாடுகள்  காரணமாகவும் இறக்கிறார்கள். ஒரே  நேரத்தில் ஒரு மருத்துவர் எப்படி 50  பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்?