ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால், கட்டணங்கள் பன் மடங்கு உயரும் என அபாயம் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வே துறையில், சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்திய ரயில்வே நிர்வாகம், வருவாயை பெருக்கும் வகையில், பயணிகள் ரயில் மற்றும் ரயில்வே நிலையங்களின் பாரமரிப்பு, பயணசீட்டு விற்பனை மற்றும் உணவு விற்பனை உள்ளிட்டவைகளை படிப்படியாக தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. இந்நிலையில், வருவாய் அதிகம் இல்லாத பயணிகள் ரயில்களை தனியாரிடம் ஒப்படைத்து, வருவாயை பெருக்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் பொதுச்செயலாளர் சூரிய பிரகாஷ் கூறும் போது, ஏற்கனவே நடைமேடை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தனியார்மயமாக்கப்பட்டதோடு இந்திய ரயில்வேக்கு சொந்தமான 14 அச்சகங்களில் 9 அச்சகங்கள் மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகம் உட்பட 5 அச்சகங்களை நிரந்தரமாக மூட அறிவிப்பு வெளியாகி உள்ளதையும் சுட்டிகாட்டிய அவர், லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் ரயில்வே துறை அழிவுப்பாதைக்கு சென்று விடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதே கருத்தை தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவும் செய்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கும் ரயில்வேதுறையை தனியார் மயமாக்குவதால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என கூறினார். பயணிகள் கட்டணம் 53 சதவிகிதம் வரை உயரும் அபாயம் உள்ளதால், தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விரைவில் நடத்திடவுள்ள போராட்டத்தில் பொதுமக்களும் இணைந்து போராட முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு ஆரம்ப கட்டத்திலேயே தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கையை ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது