திங்கள், 24 ஜூன், 2019

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...! June 24, 2019

Image
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல், பதவியை காப்பாற்ற ஆட்சியாளர்கள் யாகம் நடத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். குடம் இங்கே... குடிநீர் எங்கே என தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடிநீர் பஞ்சத்தை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றும், தண்ணீர், வேலைவாய்ப்பு, நீதி என எல்லாவற்றிலும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது எனவும் விமர்சித்தார். தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், தொழிற்சாலைகள், ஐ.டி நிறுவனங்கள் அவதிக்கு ஆளாகி வருவதாகவும் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். 
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தண்ணீர் பஞ்சம் குறித்து முதல்வர், துணை முதல்வர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக தெரிவித்த ஸ்டாலின், தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி அமைய உள்ளதாக கூறினார். 

Related Posts: