சேலத்தில் உள்ள பழமையான ஏரியை ஆக்கிரமித்து அரசே, அடுக்குமாடி கட்டடத்தை எழுப்பி வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த கட்டுமானத்தை உடனே நிறுத்த வேண்டுமென்ற குரல்கள், அதிகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
கோடைக் காலத்திலும் வற்றாத ஏரியாக காட்சியளிக்கும் இது, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரி. 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப் போனது. பல கிராமங்களுக்கு சேலத்தாம்பட்டி ஏரி தான், நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியை ஆக்கிரமித்து தான், தற்போது அரசே அடுக்குமாடி குடியிருப்பை எழுப்பி வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 42.18 கோடி ரூபாய் மதிப்பில், 496 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
சேலத்தாம்பட்டி ஏரிகரை அருகே, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவற்றில், சேலம் திருமணி முத்தாறு கரையோரத்தில் இருந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர். ஆனால், அந்த மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. அதேநேரம், குடியிருப்புகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழைக்காலங்களில் ஏரி நிரம்பும்போது, குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்குவதாகவும், தடுப்புச்சுவர் கட்டியும் பயனில்லை என்றும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
ஏற்கனவே ஒரு குடியிருப்பை ஏரிக்கரையில் கட்டி, அதில் வசிக்கும் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது அடுக்குமாடி கட்டட பணிகள் நடக்கும் இடத்திலும், தண்ணீர் ஊற்றெடுப்பதாகவும், ஆனால், அதில் மண்ணை போட்டு நிரப்பிவிட்டு, பணியை தொடர்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், அந்த கட்டடம் உறுதியாக நிற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தை அடுத்து, நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசே இந்த உத்தரவை மதிக்கவில்லை என்பதுதான் அவலத்தின் உச்சம் என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர்.
நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசே, அதை பாதுகாக்கத் தவறினால், எப்படி நீராதாரம் பெருகும் என்ற கேள்வி எழாமல் இல்லை. நீராதாரங்களை பெருக்கா விட்டாலும் பரவாயில்லை; இருப்பவற்றையாவது அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதே, மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.