credit ns7.tv
தமிழகத்தை தாண்டி திராவிடம் என்ற குரல் மேற்குவங்கத்தில் இருந்து ஒலிக்க தொடங்கியுள்ளது. மாநிலங்களவையில் ஒலித்த அந்த குரல் யாருடையது?
கடந்த 27ம் தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகந்து சேகர் ராய் , மேற்கு வங்காளம் என்ற பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு அவர் மேற்கோள் காட்டிய விவகாரம் தான் தற்போது தமிழகத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
குறிப்பாக ஆரியம், திராவிடம் என்ற இரண்டு சித்தாந்தகளுக்கு இடையிலான மோதல் ஏற்படும் போதெல்லாம், அதனை வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் இடையிலான மோதலாக மாற்றுவது வாடிக்கை. ஆனால் இந்த முறை திராவிட பாரம்பரியம் என்ற குரல் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து ஒலித்துள்ளது.
பங்களா என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு காரணம் கூறும் சுகந்து சேகர் ராய், திராவிட பாரம்பரியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிட குடும்பத்தை சேர்ந்த பங்கா என்ற மலைவாழ் மக்கள் வங்கத்தில் குடியேறியதாகவும் அவர்கள் தான் மேற்குவங்கத்தின் பூர்வ குடிகள் என்றும் கூறுகிறார் சுகந்து சேகர் ராய். அதற்கு உறுதுணையாக தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள திராவிட உத்கல பங்கா என்ற வரியையும் மேற்கோள் காட்டுகிறார் அவர்.
சுகந்து சேகர் ராயின் வார்த்தைகளை எளிதாக கடந்து சென்று விட முடியாது. காலம் காலமாக இந்தியாவின் பூர்வ குடிகள் திராவிடர்கள் என்ற குரல் ஒலித்து கொண்டிருப்பதன் தொடர்ச்சி தான் இது. சிந்து சமவெளி நாகரித்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற ஆய்வு முடிவுகளை அவ்வபோது முன்னிறுத்துகின்றனர் வரலாற்றாய்வாளர்கள்... இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறுத்த அண்ணல் அம்பேத்கர், இந்தியா முழுவதும் பரவி இருந்த இனம் நாகர் இனம் என்றும், நாகர் இன மக்கள் தான் பின்னாளில் திராவிடர்கள் என அழைத்தார்கள என கூறியது இங்கே நினைவு கூரப்பட வேண்டியுள்ளது.
மேற்குவங்கத்தை 30 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கூட அண்ணல் அம்பேத்கரின் வரிகளை ஆமோதிப்பதாகவும், வங்க மண் திராவிட பாரம்பரியம் கொண்டது எனவும் கூறியதன் தொடர்ச்சியாகவே சுகந்து சேகர் ராயின் பேச்சை கவனிக்க வேண்டியுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, அரசியல் ரீதியாக இந்த சித்தாந்தத்தை கொண்டு செல்ல திரிணாமுல் காங்கிரஸ் முயல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. பாஜகவின் அசுர வளர்ச்சிக்கு எதிராக பாரம்பரியம் என்ற விவகாரத்தை அக்கட்சி எடுத்திருப்பதாகவே கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
வலதுசாரி தத்துவத்திற்கு எதிராக தமிழகத்தில் திராவிட சித்தாந்தம் வேரூன்றி இருப்பதை நோக்கி மேற்குவங்கமும் பயணப்பட தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. இதை விட முக்கியமாக பங்களா என பெயர் மாற்றுவது குறித்து சுகந்து சேகர் ராய் பேசிய போது மேற்குவங்க பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியது கவனிக்க வேண்டியுள்ளது. எனவே பாஜகவிற்கு எதிரான குரல் என்பது பாரம்பரியம் என்ற வேரை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.