அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஈரான் வான்பகுதியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தடை விதித்தது.
இருநாடுகளுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்ற சூழலை கருத்தில் கொண்டு அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான Federal Aviation Administration (FAA) அமெரிக்க விமானங்கள் ஈரானிய வான்பகுதியை பயன்படுத்த தடை விதித்து நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்திய விமான நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, குறிப்பிட்ட ஈரானிய வான் பகுதிக்கு பதிலாக மாற்றும்பாதையில் தனது தொலைதூர விமான சேவைகளை தொடரலாம் என்று முடிவு எடுத்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தங்கள் நாட்டின் வான் பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் ஒன்றினை ஈரான் ராணுவம் சுட்டுவீழ்த்தியது. இதன் காரணமாக பயணிகள் விமானங்களுக்கும் இதே போன்ற சூழல் ஏற்படலாம் என்று கருதியே அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் ஈரானிய வான்பகுதியை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.