ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகமான நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் விழாவில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக தலைமையிலான கூட்டணியில், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.
அதே நேரத்தில், ஆர்எஸ்எஸ்ஸின் தலைமையகமான நாக்பூரில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினரிடம் கிருஷ்ணசாமி அறிமுகம் செய்து வைக்கப்பட்டதோடு, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இன பிரிவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவது உள்ளிட்ட அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலோனோரால் எதிர்க்கப்படும் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கிருஷ்ணசாமி எடுத்துவந்தார். மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அவர் பாஜகவுக்கு ஆதரவாக சுயநலனோடு செயல்படுகிறார் என்று கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், பாஜகவின் தலைமையகமான ஆர்எஸ்எஸ் நடத்திய விழாவில் நேரடியாகவே கலந்து கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.