புதன், 12 ஜூன், 2019

இந்த ஆண்டும் திறக்கப்படாத மேட்டூர் அணை; கருப்பு தினமாக அனுசரிக்கும் விவசாயிகள்..! June 12, 2019

Image
தொடர்ந்து 8 ஆண்டுகளாக திறந்து விடாத மேட்டூர் அணை இந்த ஆண்டும் திறக்கப்படாததால்,திருவாரூர் விவசாயிகள் இன்று கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்தாண்டும் மேட்டூர் அணையில் தற்போது போதிய நீர் இல்லாததால், குறுவை பாசனத்திற்கு ஜூன் 12 தண்ணீர் திறக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. மேலும், இந்த ஆண்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாததால் வேதனையடைந்த விவசாயிகள் இன்று கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர்
நாகை மாவட்டம், கடைமடை பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், ஓடம்போக்கி ஆற்றில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கீழ்வேளூரில் திரண்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர். 
தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்து போனதால், தமிழகம் பாலைவனமாக மாறியுள்ளதாகவும் வேதனை தெரிவித்த அவர்கள் 13 இலட்சம் விவசாய தொழிலாளர்களும், 4 லட்சம் சிறு குறு விவசாயிகளும் வேலை இறந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்