அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், 28 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், பிரம்மபுத்திரா மற்றும் அதன் ஒன்பது கிளை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், சுமார் 42 லட்சம் பேர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று, பீகாரிலும் பருவமழை கொட்டித் தீர்ப்பதால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. அராரியா, கிஷன்கஞ்ச், சுபாவுல் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்துவருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நாகலாந்து, மணிப்பூர், மிஷோராம், திரிபுரா, மேகலாயா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மாநிலங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
credit ns7.tv