தடை செய்யப்பட்டிருந்த வான்பகுதியை இன்று காலை முதல் போக்குவரத்திற்காக திறப்பதாக அறிவித்தது பாகிஸ்தான்.
பாலகோட் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் தங்களது வான்பகுதியில் விமான போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தது பாகிஸ்தான். இதன் காரணமாக தொலைதூர விமானங்கள் மாற்றுப் பாதையில் பயணித்ததால் விமான நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்பட்டது.
கடந்த ஜூலை 2ம் தேதி நிலவரப்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 491 கோடி, ஸ்பைஸ் ஜெட்டிற்கு ரூ.30.7 கோடியும், இண்டிகோவிற்கு ரூ.25.1 கோடியும். கோ ஏர் நிறுவனத்திற்கு 2.1 கோடியும் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
தொலைதூர விமான சேவைகளை அதிகம் அளிக்கும் ஏர் இந்தியா நிறுவனமே பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்நிறுவனத்தின் டெல்லி - அமெரிக்கா மார்க்கமாக பயணிக்கும் விமானமானது பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், கேஸ்பியன் கட, வழியாக சென்றது, வான்பகுதி மூடல் காரணமாக ஈரான் கடல்பகுதி, பெர்சியன் கஃல்ப் பகுதி மார்க்கமாக சென்றதால் கூடுதலாக 3 மணி நேரங்கள் செலவானது.
இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு திடீரென தங்கள் வான்பகுதியை விமானப் போக்குவரத்திற்கு திறப்பதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி வந்துகொண்டிருந்த AI 184 விமானம், முதல் விமானமாக பாகிஸ்தான் வான்பகுதியை கடந்து இந்தியாவிற்கு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் ஒன்றரை மணிநேரம் முன்னதாகவே அந்த விமானம் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5 மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
credit ns7.tv