2021ம் ஆண்டுக்குள் சென்னை முழுவதும் உள்ள உயர்மின் அழுத்த கம்பிகள் இரண்டாயிரத்து 567 கோடி செலவில், புதைவட கம்பிகளாக மாற்றப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
பேரவையில் கேள்வி-பதில் நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் உயர் மின்அழுத்த கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணி நீண்டகாலமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். உயர்மின் அழுத்த கம்பிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, இரவில் மட்டுமே பணிகள் நடைபெறுவதால் புதைவட மின் கம்பிகளை பதிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.
கொளத்தூர் தொகுதியில் ஓராண்டுகளிலும், மற்ற பகுதிகளில் இரண்டு ஆணடுகளிலும் பணிகள் நிறைவடையும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்தார். முன்னதாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை முழுவதும் ஆறாயிரத்து 532 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் பதிக்கும் பணி 8 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகக் கூறினார்.
கேள்வி - பதில் நேரத்தில் பேசிய சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தனது தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வீடுகள் கட்டித்தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சோழவந்தான் தொகுதியில் 3 கோடியே 89 லட்ச ரூபாய் மதிப்பில் 619 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினார்.
நில உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களே வீடு கட்டிக் கொள்வதற்கு வசதியாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்