மகாராஷ்ட்ராவில் கன மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை காரணமாக கடந்த 5 நாட்களாக மகாராஷ்ட்ராவில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை காரணமாக மும்பையில் உள்ள போம்ப்ரிபாதா என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீ அணைப்புத் துறை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புனே நகரில் உள்ள அம்பேகோன் பகுதியில் நேற்றிரவு சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். புனே நகரில் கடந்த சனிக்கிழமை சுவர் இடிந்து விழுந்த மற்றொரு விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். மும்பை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுவர் இடிந்து விழுவது, மரம் முறிந்து விழுவது போன்ற அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கன மழை காரணமாக மும்பையில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால், வாகனங்கள் மிகவும் மெதுவாக இயக்கப்படுகின்றன. மும்பையில் உள்ள சியோன் ரயில் நிலையம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv