மகராஷ்டிராவில் கடந்த சில தினங்களாகவே கடுமையான மழை பொழிந்து வருகிறது. மும்பை நகரில் விமான சேவை, ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனிடையே கடற்கரையை ஒட்டிய கொன்கன் பகுதியில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணையானது நேற்றிரவு தொடர் மழையால் நிரம்பி வழிந்தது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகிலிருந்த கிராமங்களில் வெள்ளமாக பாய்ந்தது.
அணையிலிருந்து வெளியேறிய உபரி நீர் தாதர், அக்லே, ரித்கோலி, ஓவலி, நந்திவசே உள்ளிட்ட 7 கிராமங்களுக்குள் புகுந்தது. இரவு நேரம் என்பதால் திடீர் வெள்ளத்தை எதிர்பாராத கிராம மக்களுள் சிலரது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.
14 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்த வெள்ளத்தில் மூழ்கி பலியாகினர், 20 பேர் மாயமாகியுள்ளனர். 8 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமத்தினர் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரும், வருவாய்துறையினரும், தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த அணையில் ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து முன்னதாகவே புகார் தெரிவித்ததாகவும், அப்போதே துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர்.
credit ns7.tv