புதன், 3 ஜூலை, 2019

பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை! July 03, 2019

Image
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பீர் பாட்டில்களில் பொறித்து இஸ்ரேலிய நிறுவனங்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த Malka Brewery மற்றும் Negev Beers ஆகிய நிறுவனங்கள் இணைந்து இஸ்ரேலின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவகையான சிறப்பு டிசைனில் பீர் பாட்டில்களை உருவாக்கியுள்ளன. 
வரலாற்று தலைவர்களின் உருவங்களை கேரிகேச்சர் வகையில் உருவாக்கி அதனை பீர் பாட்டில்களில் பொறித்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் தேசத் தந்தை என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தியின் உருவத்தையும் பீர் பாட்டிலில் பொறித்துள்ளனர். அதில் அவர் கூலிங் கிளாஸ் அணிந்து நவநாகரிக மேலாடையுடன் காணப்படுகிறார்.
இஸ்ரேலிய நிறுவனங்களின் இச்செயல் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய நிறுவனத்தின் தலைவர் எபி ஜோஸ் கூறுகையில், சுநந்திரத்திற்காக அரும்பாடுபட்ட ஒரு தலைவரை இழிவுபடுத்தியுள்ளனர். இது தொடர்பாக எங்கள் அமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹுவிடமும் புகார் அனுப்பியுள்ளோம், அந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என்றார்.
ஜனநாயகத்திற்கு, தொழில் தர்மத்திற்கும், அறநெறிக்கு எதிராகவும் அமைந்துள்ள இச்செயல் இஸ்ரேலில் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவரின் வாயிலாக தெரியவந்தது. காந்தியின் பெயரையும், உருவத்தையும் பீர் பாட்டிலில் பொறித்துள்ளது இந்தியாவிற்கு நேரிட்ட அவமானம் என்று இஸ்ரேல் பிரதமருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் எபி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் என்னற்ற காந்தியவாதிகளின் மனதை இஸ்ரேலிய நிறுவனங்களின் செயல் புன்படுத்திவிட்டதாகவும், பார் கவுண்டரில் காந்தி உருவம் பொறித்த பீர் பாட்டில்கள் சப்ளை செய்யப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் எபி செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி. ஆண்டோ அந்தோனி மக்களவையில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

credit ns7.tv