credit ns7.tv
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சிங் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏவான ஆனந்த் குமார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனந்த் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்ததாகவும், இரண்டு முறை அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னரும் அவர் இடம்பெறாததால் அதிருப்தியில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு அணி மாறுவதை தடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்னதாக சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது காம்ப்ளி தொகுதி எம்.எல்.ஏ கனேஷ், ஆனந்த் சிங்கை கடுமையாக தாக்கியதால் அவர் பலமாக காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் மாநில காங். தலைவர் தினேஷ் குண்டுராவின் நடவடிக்கையால் கனேஷ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
ஆனந்த் சிங் முன்னதாக சுற்றுலா துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்தியாவில் கோடீஸ்வர மக்கள் பிரதிநிதியாக விளங்குகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 1800 கோடி ரூபாயாகும்.
ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஆனந்த் சிங்கின் திடீர் ராஜினாமா கர்நாடக அரசியல் அரங்கை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியாளர்களாக இருந்து வரும் ரமேஷ் ஜார்ஹிகோலி, மகேஷ் குமதள்ளி, பிரதாப் கவுடா மற்றும் பி.சி.பாட்டீல் என எம்.எல்.ஏக்கள் வரிசையாக ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.