பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு, பணி வழங்கக்கூடாது என, தங்களது இணைப்பு கல்லூரிகளுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற தனியார் சுயநிதி கல்லூரிகளில் உரிய தகுதி இல்லாதவர்களை பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, பல்கலைக் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இரண்டு முறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தற்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர், கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நெட், செட், பிஎச்டி தகுதி இல்லாதவர்களுக்கு கல்லூரியில் முதல்வர், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட எந்த பணியும் வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
தகுதி இல்லாதவர்கள் பணியில் நீடித்தால், அந்த கல்லூரிகளின் இணைப்பு ரத்து செய்யப்படும் எனவும், பல்கலைக் கழக பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஜூன் 20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
credit ns7.tv