ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என, தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், முதலமைச்சர் பதிலளிப்பதை பார்த்து, "அடேங்கப்பா" என அசந்து போய்விட்டதாக கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, திமுக உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் தீர்மானத்தின் மீது பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா பகுதியின் நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கப்படும் என கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இப்போது வரை தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், எதிர்காலத்திலும் அரசு அனுமதி வழங்காது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் காமராஜ், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் மற்றும் அன்னபூர்ணா திட்ட பயனாளிகள் ஆகிய 4 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு, மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்தார். முன்னதாக, திமுக உறுப்பினர் செங்குட்டுவனின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.
கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு செயல்படும், என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி குறித்து முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். மேகாதாதுவில் அணைக்கட்ட அனுமதிப்போம் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் எனவும் ராகுல் காந்தி கூறியதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். வெளிநடப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரின்ஸ், முதலமைச்சரின் குற்றச்சாட்டு பொய்யானது என கூறினார்.
சட்டப்பேரவையில் எந்த கேள்வி கேட்டாலும் முதலமைச்சர் பதிலளிப்பதை பார்த்து, "அடேங்கப்பா" என அசந்து போய்விட்டதாக, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசிய துரைமுருகன், முந்தைய ஆட்சி காலத்தில், கேள்வி நேரத்தில் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும் என்றும், ஆனால், நீண்ட காலமாக இந்த துறைகளில் கேள்விகள் வருவதில்லை எனவும் கூறினார். மேலும், முதல்வர் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவர் அல்ல எனவும், அவர் நன்கு பதிலளிப்பார் எனவும் துரைமுருகன் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இனி முதல்வரின் துறைகளிலும் கேள்விகள் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு, உடனுக்குடன் சுடச்சுட பதில் சொன்னால் தான், பத்திரிக்கைகளில் செய்தி வருவதாக முதல்வர் கூறினார்.
இல்லையெனில் குற்றச்சாட்டுகள் மட்டுமே, பத்திரிகைகளில் வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
credit ns7.tv