நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வறுமை காரணமாக ஒரு குடும்பம், மயானத்தில் தஞ்சமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்தி வேலூரை அடுத்துள்ள பிலிக்கல்பாளையத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்த ராமசாமி என்பவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். மனைவி இறந்துவிட்ட நிலையில், தாய், ஒரு மகள், இரண்டு மகன்களுடன் வாடகை வீடு ஒன்றில் ராமசாமி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னதால், வேறு வழியின்றி, இவரது குடும்பம், பிளிக்கல்பாளைய மயானத்திற்கு அருகே உள்ள குப்பை சேகரிக்கும் கொட்டகையில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. வேலைக்கும் செல்ல முடியாமல், மருத்துவ சிகிச்சையும் பெற முடியாமல், ராமசாமியின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. ராமசாமியின் தாயார் கூலி வேலைக்குச் சென்று பெற்று வரும் சிறு தொகை மூலம் இவர்கள் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
போதிய பாதுகாப்பும் இல்லாமல், உணவும் இல்லாமல் தவித்து வரும் ராமசாமியின் குடும்பத்தின் நிலையை அறிந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ராமசாமிக்கு மருத்துவ உதவியும், அவரது குடும்பத்திற்கு பொருளாதார உதவியும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
credit ns7.tv