ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்காத நீதிபதிகள், ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மீறும் வாகன ஒட்டிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
credit ns7.tv