வியாழன், 11 ஜூலை, 2019

குரூப் தேர்வுகளுக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! July 11, 2019

ns7.tv
Image
குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப்பணிகளுக்கான தேர்விற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சக்கரைசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், 2009ம் ஆண்டு வருவாய்துறை உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதன் அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான தாம், விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருப்பதால் கூடுதல் கல்வித்தகுதி எனக்கூறி தம்மை நிராகரித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது  நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதாக கூறினார். கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாக இருப்பதால், அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். 
அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உட்பட எப்போதும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்பு காட்டுவதாக விமர்சித்த நீதிபதி, பணிகளை முறையாகச் செய்வதில்லை எனவும் விமர்சித்தார். எனவே, இந்த மனுவை நிராகரிப்பதாக குறிப்பிட்ட அவர், குரூப்-3, குரூப்-4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களில் நிர்ணயம் செய்ய வேண்டும் என நிர்வாகத்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Posts: