credit ns7.tv
அசாமில் பெய்து வரும் கனமழையால் 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரம்மபுத்ரா அணையின் நீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. பிரம்மபுத்ராவில் இருந்து வெள்ள நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் சாலைகளை வெள்ள நீர் அடித்துச் சென்றுவிட்டன. வெள்ளத்தால் வீடுகள், வயல்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. பெரும்பாலான இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் மூழ்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் 2 ஆயிரத்து 168 கிராமங்களை சேர்ந்த 14 லட்சத்து 6 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கனமழை வெள்ளத்தால் அசாமின் காசிரங்கா பூங்காவின் 70 சதவீதம் பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளன. எஞ்சிய விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் வடக்குப்பகுதி வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கை, பாகமதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் மக்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தற்காலிக முகாம்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர்.
மேலும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே பீகார் மாநிலம் அராரியா பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த புதுமண தம்பதியினரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். பராமானா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமண தம்பதியினரை பிளாஸ்டிக் பேரல்களை படகாக பயன்படுத்தி மீட்பு குழுவினர் மீட்டனர்
இதே போன்று நேபாளமும் மழையின் தாக்குதலுக்கு தப்பவில்லை. அந்நாட்டில் பெய்து வரும் கனமழைக்கு இது வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர். 35 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளது