சமாஜ்வாதி கட்சி எம்.பி அசம் கானின் பெயரை அரசின் நில மாஃபியாக்கள் பட்டியலில் சேர்க்க பரீசிலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்.பியான அசம் கான் சர்ச்சைக்குரிய தலைவராக பார்க்கப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அசம்கானின் பெயரை நில மாஃபியா என வகைப்படுத்தி உத்தரப்பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட ராம்பூர் மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017ல் பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்ற போது பொதுமக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நில மாஃபியாக்களை அடையாளப்படுத்தும் வகையில் நில மாஃபியாக்கள் பட்டியலை இணையத்தில் வெளியிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி அசம்கான் மீது தற்போது 30க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவை பெரும்பாலும் அரசு அல்லது விவசாயிகளிடமிருந்து அபகரித்த நிலங்களாகவே உள்ளன. இதன் காரணமாக அசம்கானின் பெயரை அரசின் நில மாஃபியா பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்போவதாக மாவட்ட எஸ்.பி அஜய் பால் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண பொருட்செலவில் சமாஜ்வாதி தலைவர் கட்டி வரும் முகமது அலி ஜவுஹர் பல்கலைக்கழகத்திற்காக 26 விவசாயிகளை மிரட்டி, கட்டாயப்படுத்தி அவர்களிமிருந்து நிலத்தை பறித்ததாக அசம் கான் மற்றும் அவரது காவல்துறை நண்பர் மீது கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நீதிபதியுடன் இணைந்து காவல் கண்காணிப்பாளர் அஜய் பால், அசம் கான் மீது காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களை ஆராய்ந்த பின்னர் அரசின் நில மாஃபியா பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வது தொடர்பான முடிவு மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி அஜய் பால் கூறினார்.
2012-17 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த போது தனது பதவியினை தவறாக பயன்படுத்தி ஏழை விவசாயிகளை மிரட்டி கிட்டத்தட்ட 5,000 ஹெக்டெர் நிலத்தை அசம் கான் அபகரித்துள்ளதாக வருவாய் துறை புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் அசம் கான், நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வேட்பாளரான ஜெயப் பிரதா குறித்து பேசிய பேச்சுக்கள் பல தரப்பினராலும் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது நினைவுகூறத்தக்கது.
credit ns7tv