மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பொது மக்கள் தங்களது கருத்தை கூறுமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக்குழு 2016-ல் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில் தனது முழுமையான அறிக்கையை கடந்த மே31 ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது.
இதற்காக மத்திய அரசு, தேசிய கல்விக் கொள்கை வரைவை பற்றி ஜுன் 30 ஆம் தேதி வரை பொது மக்கள் தங்களது கருத்தை கூறலாம் என அறிவித்து. பின்னர் கால அவகாசத்தை ஜுலை 31 ஆம் தேதிவரையில் நீட்டித்தது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து வரும் 25ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில், புதிய கல்விக் கொள்கையின் வரைவு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் என,பலதரப்பினரும் பார்வையிட்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை, வரும் 25ம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
மின்னஞ்சல் வழியாக கருத்து தெரிவிக்கலாம் என்றும், தபால் மூலமாக கருத்துக்களை தெரிவிப்பவர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முகவரிக்கும் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டங்களும் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
credit ns7.tv