தொழில்நுட்பம் எட்டிப் பார்க்காத காலத்தில் கர்மவீரர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் இருபதாம் நுாற்றாண்டின் ஈடு இணையற்ற பாசனத்திட்டமாகப் போற்றப்படுகிறது.
பி.ஏ.பி என்று அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கான விதை 97 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. கொங்குச் சீமையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், மேற்கு நோக்கிப் பாயும் சாலக்குடி ஆற்றை, கிழக்கு நோக்கித் திருப்பிவிட்டு, தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க ஒரு திட்டம் வகுக்க 1935-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்த வி.கே.பழனிச்சாமி கவுண்டர் என்பவர் விவசாயிகளை ஒன்று திரட்டி திட்டத்திற்காகப் போராடினார். இதையடுத்து, தமது ஆட்சியின் போது, இந்த திட்டத்தை கையில் எடுத்தார் காமராஜர்.
பாசன திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் அரசு சார்பாக பயிற்சி மேற்கொண்ட யூ.ஆனந்தராவ் என்ற பொறியாளரை பரம்பிகுளத்தில் அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள காமராஜர் உத்தரவிட்டார். வி.கே .பழனிச்சாமியுடன் மலை பகுதிகளில் யானை மீது சென்று ஆய்வு மேற்கொண்டு அரசிடம் சமர்பிக்கப்பட்ட திட்டம் தான் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம். அப்போதைய கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மற்றும் பாசனதுறை அமைச்சராக வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழில் நுட்பங்கள் எட்டி பார்த்திராத அக்காலத்தில் மலைகளை குடைந்து பல்வேறு இன்னல்களை கடந்து பி.ஏ.பி என்கிற பிரம்மாண்டமான திட்டம் துவங்கப்பட்டது இன்றைய பொறியாளர்களையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
பரம்பிக்குளம் அணை, தமிழகத்தில் உள்ள மூன்றாவது பெரிய அணையாக கருதப்படுகிறது. இத்திட்டம் மூலம் 185 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட ஒப்பந்தப்படி பெறப்படும் தண்ணீரில் கேரளாவிற்கு 19.55 டி.எம்.சி தண்ணீரும், தமிழகத்திற்கு 30.5. டி.எம்.சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். காமராஜர் ஆட்சிக்காலத்திலேயே இந்தத் திட்டத்தில் பெரும்பாலான அணைகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.
கேரளாவில் இடைமலையாறு மற்றும் இடுக்கி பகுதியில் அணைகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆனைமலையாற்றில் அணை கட்டலாம் என்பது விதி. ஆனால், கேரளாவில் அணைகள் கட்டி முடிக்கப்பட்டும் ஆனைமலையாறு அணை கட்டி முடிக்கப்படவில்லை. தமிழகத்துக்கு 2 டி,.எம்.சி தண்ணீர் கிடைக்க வகை செய்யும் ஆனைமலையாறு பகுதியில் அணை கட்டுவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது. இத்துடன் நல்லாறு திட்டமும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.
credit ns7.tv