தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேர், தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்பதாலேயே, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்பப் பெறப் பட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்று சொல்வதைப் போல தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் அதிமுக ஆட்சி கலைந்து விடும் எனச் சொல்லி வருகிறார். ஆட்சிக்கலைப்பு குறித்து ஸ்டாலின் பேசுவதை விவாதமாக்குவது கேள்வி நேரத்திற்கு புதிதில்லை என்றாலும் இந்த முறை ஸ்டாலின் பேசிய தொனியே வித்தியாசமானதாக இருக்கிறது.
வழக்கம் போல் ஆட்சி நிச்சயம் கவிழும் என்று சொன்னதோடு நிறுத்தாமல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரைக் காப்பாற்றவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாகவும், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்பதாலேயே தீர்மானம் திரும்பப் பெறப் பட்டதாகவும் கூறி புது விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறார் ஸ்டாலின்.
எம்.எல்.ஏக்களைக் கண்காணிக்க அதிமுக வைத்திருக்கும் ஒற்றர்களுக்கே நாங்கள் ஒற்றர்கள் வைத்திருக்கிறோம் என்ற ஸ்டாலினின் பேச்சு, அதிமுக எம்.எல்.ஏக்களோடு திமுக பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாக வந்த தகவல்களையும், ஸ்டாலினின் நேற்றைய பேச்சையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே யாமறியோம் பராபரமே என ஸ்டாலின் கூறுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
இப்படி ஆட்சிக்கலைப்பு முடிவில் ஸ்டாலின் உறுதியாக இருக்க, ஸ்டாலினை விட அதிகமாக ஆட்சிக்கலைப்பு குறித்து பேசிய டிடிவி தினகரன் டெல்லிக்குப் பயந்து அதிமுக ஆட்சியை ஸ்டாலின் கலைக்க மாட்டார் என கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியை பிரதமர் மோடி காப்பாற்றுவார் என்ற ஐயத்தினால் தினகரன் இப்படி பேசுகிறாரா அல்லது ஸ்லீப்பர் செல்கள் இனி வெளிவர வாய்ப்பே இல்லை என்பதால் இவ்வாறு பேசுகிறாரா என்ற கேள்விகளும் எழுகின்றன.
credit ns7.tv