credit ns7.tv
சாலை போக்குவரத்து நெரிசலை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறிய உதவும் கூகுள் மேப்பில் இனி பேருந்து நெரிசலையும் தெரிந்துக் கொள்ளலாம், விரைவில் வருகிறது அதற்கான வசதி.
முகவரி இல்லை என்றால் என்ன? குகூள் மேப் இருந்தால் போதும் செல்ல வேண்டிய இடம், தூரம், பயண நேரம், போக்குவரத்து நெரிசல் என அனைத்தையும் துள்ளியமாக தெரிந்துகொண்டு பயணத்தைத் தொடங்க முடியும். இதை தாண்டி விரைவில் பயணம் செய்ய உள்ள பேருந்து மற்றும் ரயில்களின் கூட்ட நெரிசலையும் அறிவதற்கான சேவையை வழங்க உள்ளது கூகுள் மேப்.
நாம் பேருந்து மற்றும் ரயிலுக்காக அதற்கான நிறுத்தத்தில் நிற்கும் போது வரக்கூடிய பேருந்தோ அல்லது ரயிலோ கூட்டமாக இருக்கிறதா, அதில் உட்கார இடம் இருக்கிறதா என்ற தகவலை விரைவில் பெற முடியும். இந்த சேவையை கடந்த கால பயணங்களில் இருந்து பெற்ற தரவுகள் அடிப்படையாகவும், கூகுள் மேப் சேவையை ரயில், பேருந்துகளில் பயன்படுத்திய நபர்களிடம் இருந்தும் கூட்ட நெரிசலுக்கான நான்கு கேள்விகள் மூலம் பெற்றுள்ளது. உதராணமாக நீங்கள் பயணித்த பேருந்தில் அதிக காலி இடங்கள் இருந்ததா?, குறைவான காலி இடங்கள் இருந்ததா? நிற்க மட்டும் இடம் இருந்ததா? அல்லது நெருக்கமாக நிற்க வேண்டி இருந்தா? என்ற கேள்விகளுக்கான பதில் மூலம் இந்த சேவையை வடிவமைத்து உள்ளது கூகுள் மேப்.
இந்த சேவை கூகுள் மேப்-ஐ தினசரி பயணத்திற்கு உபயோகிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும், பேருந்து கூட்டமாக இருந்தால் அடுத்த பேருந்தை தேர்தெடுக்க முடியும். இருப்பினும் இது முழுக்க முழுக்க பயனாளர்களை சார்ந்து இயங்குவதால் இதன் சேவை துள்ளியமாக இருக்குமா என்கிற சந்தேகமும் மற்ற பயனாளர்களிடம் எழுகிறது. இதற்காக முதற்கட்டமாக சோதனை சேவையை உலகில் உள்ள 200 நகரங்களில் கூகுள் செயல்படுத்தி உள்ளது. இந்த சேவைக்கான வரவேற்பை தொடர்ந்து விரைவில் பிற நகரங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை மூலம் போக்குவரத்து நெரிசல், அதனால் ஏற்படும் கால தாமதம், போக்குவரத்து நெரிசலால் மாறியுள்ள பேருந்தின் பயண நேரம் என அனைத்தையும் கணிக்க முடியும். சில வாரங்களுக்கு முன்னராக இந்தியாவில் பயண பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சேவையை கூகுள் மேப் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து விரைவில் பேருந்து நெரிசலை அறிவதற்கான சேவையும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.