திங்கள், 5 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்...! August 05, 2019

credit ns7.tv
Image
காஷ்மீரில் நிகழும் பதற்றம் தொடர்பாக, தலைநகர் ஸ்ரீநகரில் நள்ளிரவு முதல், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும், என ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். 
இதை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.  அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இணையம் மற்றும் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, தான் வீட்டுச்சிறையில் இருப்பது போன்று உணர்வதாக, முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது.