திங்கள், 5 ஆகஸ்ட், 2019

வேலூர் மக்களவைத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு! August 05, 2019

credit ns7.tv
Image
வேலூர் மக்களவை தொகுதியில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் உட்பட, 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில், 1533 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலு,ம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பாட் இயந்திரங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
பாதுகாப்பு பணியில் நான்காயிரம் போலீஸாரும், 20 கம்பெனிகளைச் சேர்ந்த ஆயிரத்து 600 துணை ராணுவத்தினரும், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகளில், துணை ராணுவத்தினர் மற்றும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 
வாக்குப்பதிவு நாளில் தற்காலிக பிரசார அலுவலகத்தை, வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கு தடை விதித்துள்ளது. 
வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, மலை கிராமமான நெக்னமலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சாலை வசதி இல்லை. அதனால், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை, தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் தலையில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர்.  
தேர்தல் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, உணவு சமைப்பதற்காக, அரிசி, காய்கறிகள், குடிநீர் ஆகியவையும் எடுத்துச் செல்லப்பட்டன. இவற்றை, கிராம மக்கள், தலையில் சுமந்தபடி எடுத்துச் சென்றனர்.