credit ns7.tv
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் இன்று அறிவித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான குடியரசு தலைவரின் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது.
இதன் மூலம், இதுவரை ஜம்மு காஷ்மீருக்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தாகிறது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றத்திற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அமித் ஷாவின் அறிவிப்பை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
குடியரசுத் தலைவரது உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் சாசன நகலை கிழிக்க முற்பட்டதால், மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களான நசீர் அகமது லாவேவும், மீர் முகம்மது பையாசும் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்