கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே 72 லட்சம் பேர், தங்கள் சொந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயரும் மக்களுக்கான ஐ.நா. அமைப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பால், இடம் பெயரும் மக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடல் அரிப்பு, கடல் நீரில் அமிலத்தன்மை அதிகரிப்பு, பாலைவனப் பகுதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிக அளவில் இடம் பெயர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பகுதிகளில் தொடர்ந்து வசிக்க முடியாது என்ற நிலையில், வேறு வழியின்றி மக்கள் இடம் பெயர்வதாகவும், இது மிகவும் கவலை தரும் விஷயம் என்றும் ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் தொடர்ந்து மாசடைந்து வருவதால், எதிர்காலங்களில் இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, சுற்றுச் சூழல் மாசு கட்டுப்படுத்தப்படாவிட்டால், 2050ம் ஆண்டுக்குள் 14 கோடியே 30 லட்சம் பேர் இடம் பெயர நேரிடும் என உலக வங்கி எச்சரித்துள்ளதையும் ஐ.நா ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
credit ns7.tv