வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சாலைவிதிகளை மதிக்காவிட்டால் 6 மாதம் சிறை - வருகிறது புது சட்டம்! August 01, 2019

credit.ns7.tv
Image
சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கவும், 6 மாதம் வரை சிறையிலடைக்க வகை செய்யும் மசோதாவும் நிறைவேற்றப்படவுள்ளது.
மோட்டார் வாகனப் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. அந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் தவறான திசையில் வாகனங்களை ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், சிக்னலை பொருட்படுத்தாமல் வாகனம் ஓட்டுபவர்கள் ஆபத்தான வாகனஓட்டிகளாக கருதப்படுவார்கள்.
வாகன விபத்துகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சமாக உள்ளதையடுத்து இந்த சட்டத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் சாலை விதிகளை மதிக்காதவர்களுக்கு தற்போது இருப்பதை விட ஐந்து முதல் பத்து மடங்கு அதிக அபராதம் விதிக்கவும், தானியங்கி முறையில் வாகன லைசன்ஸ் வழங்கவும், குறைபாடுடைய வாகனங்களுக்கு அந்த வாகன உற்பத்தியாளர்களே பொறுப்பு என்பது உள்ளிட்ட திருத்தங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாகன உற்பத்தி விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகன நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை விதிக்க வாய்ப்புள்ளது. லைசன்ஸ் பெறும் வயதைத் தொடாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களது பாதுகாப்பாளர்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை தண்டனைகளாக கொடுக்கவும், அந்த சிறுவன்/சிறுமிக்கு 25 வயது வரை லைசன்ஸ் எடுக்க தடைவிதிக்கப்படும் என்றும் அந்த சட்டதிருத்தத்தில் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த மசோதாவானது சிறிய திருத்தங்களுக்காக மீண்டும் மக்களவைக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது. மக்களவையில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்திற்கும், மாநிலங்களவையில் கொடுக்கப்பட்டதற்கு இடையில் வேறுபாடு இருந்ததையடுத்து, குறைபாடுகளைக் கொண்ட சட்டத்தை கொண்டுவரப்பார்க்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியதையடுத்து அதில் திருத்தம் செய்யப்படவுள்ளது. அது அச்சில் ஏற்றுவதில் ஏற்பட்ட பிழை என்றும், இந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் வாகனப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சட்டத்தில் மாநிலங்களுக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும்,  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளதோடு, தனது நோக்கமெல்லாம் விபத்துகளை குறைப்பதே என்று தெரிவித்துள்ளார். உயிரிழப்பவர்களில் 65% பேர் 15 முதல் 34 வயதுடையவர்களாக இருப்பதாகவும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த அளவை குறைப்பதில் தோல்வியைத் தழுவிவிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சட்டமானது பாதுகாப்பான சாலைகளை வகுத்துக்கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகளால் பொதுவாக செய்யப்படும் சில குற்றங்கள் ஆபத்தான பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, ட்ராஃபிக் சிக்னல்களை பொருட்படுத்தாதவர்கள், நிறுத்தற் குறிகளை மதிக்காதவர்கள், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், வாகனங்களை ஓவர்டேக் செய்யும்போது விதிகளை மீறுபவர்களுக்கு 1000ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் இந்த அபராதத்தை ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்துக்கொள்ளலாம் என்று அந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை காவலர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் சிசிடிவி கேமரா இல்லாத இடங்களில் இது லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் இந்த சட்டதிருத்தத்தால் விபத்துகள் தான் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். 
இந்த சட்டம் குறித்து அமைச்சரவையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்தச் சட்டம் முழுமையாக வரைமுறைபடுத்தப்பட்டு, அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வரை உடனடியாக திணிக்கப்படாது. முதலில் மக்களை அவர்கள் சொந்த பாதுகாப்பிற்காக சாலைவிதிகளை மதிக்குமாறு அறிவுறுத்தப்படும். இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மக்களை பீதிக்குள்ளாக்காது. புதிய சட்டவிதிகளை அமல்படுத்தும் முன் மக்களுக்கு போதிய கால அவகாசத்தை வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சாலைவிதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதோடு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும், லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீண்டும் லைசன்ஸ் எடுக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, லைசன்ஸில் உள்ள முகவரி அல்லது வேறு விவரங்களை மாற்றுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்குச் செல்ல தேவையில்லை ஆன்லைனிலேயே சரிசெய்துகொள்ளலாம். லைசன்ஸ் ஆயுட்காலம் காலாவதியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை, ஒரு ஆண்டுக்கு முன்பு எந்த நேரத்திலும் சென்று அதை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டாக உள்ளது அது 5 ஆண்டுகளக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓலா, ஊபர் போன்ற கார் நிறுவனங்கள் அந்த மாநில அரசுகளிடம் லைசன்ஸ் பெற வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபட்டால் 25000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.