வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சரணடைய வந்த குற்றவாளியை சான்றிதழ் இல்லை என தப்பிக்க விட்ட காவலர்.! August 02, 2019

ns7.tv
Image
கரூரில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான  நிலை அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
கரூர் மாவட்டம் முதலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 196 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, முதலைப்பட்டியை சேர்ந்த வீரமலை என்பவரும் அவர் மகன் நல்லதம்பி என்பவரும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் கூலிப்படையை ஏவி நல்லதம்பியையும் வீரமலையையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரானர் வழக்கறிஞர், கொலையில் ஈடுபட்ட 8பேரில் 6 பேர்  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும், ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் அறிவிக்கும் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாத காரணத்தாலேயே இது போன்ற குற்ற சம்பவங்களும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளும் நடைபெறுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த இரட்டை கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஜெயகாந்தன் என்பவர், மதுரை நீதிமன்றத்தில் சரணடையவந்த போது, அவரிடம் முறையான சான்றிதழ் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். போலீசாரின் அலட்சியத்தால், குற்றவாளி தப்பிச்சென்றதால் குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரை திருச்சி மத்திய மண்டல  துணை தலைவர் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.