மின்சார தேவை உயர்வதால் மின்கட்டணமும் உயர்கிறது என விளக்கம் சொல்லும் அரசுகளுக்கு மத்தியில், இதற்கு நேர்மாறாக ஒரு நடவடிக்கையை எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது டெல்லி மாநில அரசு.
மின்சார கட்டணத்தை கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தாமல் வைத்திருந்த டெல்லி அரசு, தற்போது 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என அறிவித்துள்ளது. மேலும், அதற்கு மேல் உள்ள மின்சார பயன்பாட்டுக்கு கட்டணக் குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தலைநகர் டெல்லியில், 200 யூனிட் வரை மின்சாரக் கட்டணம் இல்லை. மேலும், 2 கிலோ வாட்ஸ் முதல் 15 கிலோ வாட்ஸ் வரையிலான மின் கட்டணமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பால் தமிழகம் போன்ற பிற மாநிலங்களிலிருந்து, படிப்புக்காக வந்து வாடகை வீட்டில் வசிக்கும் மாணவர்கள் அதிகம் பயன் பெற முடியம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மின்சார தட்டுப்பாடு இல்லாமல் மாறியிருந்த டெல்லி அரசின், தற்போதைய நடவடிக்கைகள் வரவேற்பை பெற்றிருந்தாலும், அடுத்து வரக்கூடிய தேர்தலுக்கான வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என்கிற விமர்சனமும் எழாமல் இல்லை.
கட்டண குறைப்பை தாண்டி 200 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் இல்லை என்கிற அறிவிப்பு, டெல்லி வாழ் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
credit ns7.tv