credit ns7.tv
வேலூர் மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது. தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டனர். சத்துவாச்சாரியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெறச் செய்யுமாறு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய் வாக்குறுதிகளை வாய்க் கூசாமல் திமுக கட்டவிழ்த்து விட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். வேலூர் மாவட்டத்திற்காக பல புதிய திட்டங்களை விரைவில் நிறைவேற்ற இருப்பதாகவும், அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் வெற்றியை தடுக்க ரெய்டு என்கிற பெயரில், பாஜக, அதிமுக கூட்டாக சேர்ந்து சூழ்ச்சி செய்ததாக விமர்சித்தார். தேர்தலை வேண்டுமென்றால், அதிமுக - பாஜக தடுக்கலாம், ஆனால், திமுகவின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியாது, எனக் கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார், ஜால்ரா போட்டு வருவதாகவும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.