வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் வேகமாக நிரம்பிவரும் நீர்நிலைகள்! August 09, 2019

credit ns7.tv
Image
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வருவதுடன், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
தேனி மாவட்டத்தில், நேற்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால், அம்மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால், போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் அருவி, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி பகுதியில் உள்ள பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் மற்றும் புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்மாவட்டத்தில் அருவிகள் மற்றும் ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 10 அடியை தாண்டியது. இதனால், அணையின் நீர்மட்டம் தற்போது 123 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 4,318 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவு 16,321 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டி வரும் தொடர்மழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 11.60 அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு 1,842 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.  77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 43.30 அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து  2,113 கன அடியாக அதிகரித்துள்ளது.  
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார  பகுதிகளான கோதையார், பேச்சிப்பாறை, மைலார் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதமடைந்ததால், மோதிரமலை, சிற்றார், சிலோன் காலனி, மூக்கரைக்கள் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  பழுதடைந்த மின் இணைப்புக்களை சீரமைக்கும் பணிகளில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.