சனி, 10 ஆகஸ்ட், 2019

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு! August 10, 2019

credit ns7..tv 
Image
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பவானி ஆற்றிலும், மாயா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்  பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், கீழ் பவானி ஆற்றில் எந்த நேரமும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, பவானிசாகர் அணை கீழ் பவானி ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் நொய்யல் ஆற்றிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றை நம்பி அமைக்கப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையைச் சுற்றியுள்ள தரைப்பாலங்கள் முழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தரைப்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை 
விதிக்கப்பட்டுள்ளது. 
தொடர்மழை காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அதிகப்படியான தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் திறந்து விடப்பட்ட 1 லட்சம் கனஅடி தண்ணீர், நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.