புதன், 14 ஆகஸ்ட், 2019

நெல்லை கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் காவல்துறை திணறல்! August 14, 2019

credit ns7.tv
Image
திருநெல்வேலி அருகே வயதான தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முடியாமல் காவல் துறை திணறி வருகிறது. 
திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணி புரத்தில் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த  11ஆம் தேதி அரிவாள்களுடன் முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சண்முகவேலின் கழுத்தை துண்டால் இறுக்கி கொள்ளையடிக்க முயன்றனர். அதில் இருந்த விடுபட்ட சண்முகவேல் தனது மனைவி செந்தாமரையுடன் சேர்ந்து துணிச்சலுடன் கொள்ளையர்களை விரட்டினார். ஆனாலும் கொள்ளையர்கள் செந்தாமரையின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கொள்ளையர்களை தைரியத்துடன் போராடி விரட்டிய முதிய தம்பதியினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து கடையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு முகமூடி கொள்ளையர்களை பிடிப்பதற்காக அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் காவல்துறையினர் முகமூடி கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். காவல் துறை விரைந்து செயல்பட்டு முகமூடி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.