புதன், 14 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் ஆளுநரின் சவாலை ஏற்ற ராகுல்காந்தி...! August 14, 2019

Image
காஷ்மீருக்கு செல்ல தனி விமானம் தேவையில்லை எனவும், மக்களை சந்திக்க சுதந்திரம் அளித்தால் போதும் என அம்மாநில ஆளுநரின் கருத்துக்கு காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உண்மை நிலையை அறிய டெல்லியில் அமர்ந்து பேசாதீர், காஷ்மீருக்கு நேரில் வந்து ஆய்வு செய்தபின் கருத்துகளை தெரிவியுங்கள் எனவும், அதற்காக விமானம் அனுப்பவும் தயார் எனவும் அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விமானம் அனுப்பத் தேவையில்லை எனவும், சுதந்திரமாக சென்று மக்களைச் சந்திக்க அனுமதி கொடுத்தால் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News7 Tamil
இதனை சுட்டிக்காட்டி ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தி இப்பிரச்னையை அரசியலாக்கும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து வந்து மக்களை சந்திக்க அனுமதி கோருகிறார் என குற்றம்சாட்டியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி மக்களிடையே பிரச்னைகளை தூண்டிவிடும் முயற்சியாகும் எனவும் விமர்சித்துள்ளது.

credit ns7.tv