சனி, 17 ஆகஸ்ட், 2019

தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு! August 17, 2019

Image
தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை, மாற்று திறனாளிகள் கேட்கும், படிக்கும் வகையில் வழங்குவது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 
தேசிய கல்விக் கொள்கையை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதோடு மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் குறைபாடு உடையோர் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை முழுவதும் படிக்கும் வகையில் உரிய கால அவகாசம் வழங்க கோரி தீபக் நாதன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். 
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை, ஆங்கிலம் மற்றும் இந்தியில் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  மாநில மொழிகளில் அதனுடைய சுருக்கம் மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்பது தேவையற்றது எனவும் குறிப்பிட்டார். 
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மத்திய மற்றும் மாநில ஆணையர்களை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மாற்று திறனாளிகளுக்கு ஏற்றபடி வழங்குவது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

credit ns7.tv