உலகின் மிகப்பெரிய தீவாக விளங்கும் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கலாமா என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முழுவதும் பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ள கிரீன்லாந்து தீவானது, கனடாவின் வடகிழக்கில் அமைந்துள்ளது. 57,000 பேர் வசிக்கும் இத்தீவு டென்மார்க் நாட்டின் ஆளுகைக்கு கீழ் உள்ள பிரதேசமாகும். இதன் பரப்பளவு 2 மில்லியன் சதுர கிமீ ஆகும். பெயருக்கு ஏற்றார் போல கிரீன்லாந்து தீவு இல்லை என்பதே உண்மை. 85% அதிகமான அதன் பரப்பளவு 1.9 மைல் (சுமார் 3 கிமீ) அகலம் கொண்ட பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. உலகின் 10% நன்னீர் கிரீன்லாந்தில் உள்ளது.
கிரீன்லாந்து தீவினை அமெரிக்க அரசு விலைக்கு வாங்குவது குறித்து ஆலோசகர்களுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிரீன்லாந்து தீவை வாங்குவது அமெரிக்காவிற்கு பலன் தரும் என்று அரசு ஆலோசர்களால் நம்பப்படுகிறது. அமெரிக்காவின் வடக்கில் உள்ள Thule விமானதளம் கிரீன்லாந்தில் அமைந்துள்ளது. கிரீன்லாந்தின் இயற்கை வளமும், புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே டொனால்ட் ட்ரம்ப் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராவதற்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் போன ரியல் எஸ்டேட் தொழிலதிபராக திகழ்ந்தார். அமெரிக்க அதிபர் ஆனதற்கு பின்னரும் அவர் தனது முந்தைய வேலைக்கு அவர் திரும்பியுள்ளதாக சமூல வலைத்தளங்களில் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே டென்மார்க்கைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் டொனால்ட் ட்ரம்பை கடிந்தும் வருகின்றனர்.
முன்னதாக 1945ம் ஆண்டில் அமெரிக்காவின் 33வது அதிபரான ஹாரி எஸ் ட்ருமென் இதே போன்று கிரீன்லாந்த் தீவை விலைக்கு வாங்க முயற்சித்தார். அப்போது அத்தீவிற்கு 100 மில்லியன் டாலர்கள் விலை பேசப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7,tv