சனி, 17 ஆகஸ்ட், 2019

அயோத்தி வழக்கு விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! August 17, 2019

Image
அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பான ஆதாரங்களை வழங்குமாறு, மனுதாரர்களில் ஒன்றான ராம் லல்லா விராஜ்மான் என்ற அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா விராஜ்மான் அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது.இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உச்சநீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து வருகிறது. 
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, அயோத்தியில் கோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு பதிலளித்த ராம் லல்லா விராஜ்மான் அமைப்பின் வழக்கறிஞர், கடந்த 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர், சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்ததாக கூறினார். 
மேலும், அவரது ஆய்வில் இந்து தெய்வங்களின் உருவங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பான சில புகைப்படங்களையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

credit ns7.tv