சனி, 17 ஆகஸ்ட், 2019

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த மருத்துவமனைகள்! August 16, 2019


Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் பல்வேறு வகைகளில் அரசை ஏமாற்றி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஊழல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தும் வகையில், பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியால் கடந்த ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவரும் காப்பீட்டுத் திட்டம் இந்தியா முழுமைக்கும் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தால் பொருளாதார பின்னணி இல்லாத மக்களும் பயன்பெற்று வரும் நிலையில், சில மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் ஊழல் செய்யும் நோக்கில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் நடைபெற்றுள்ள பெரும்பாலான ஊழல்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவமனைகள் 1.20 கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும், டயாலிசிஸ் செய்யும் வசதியும், கிட்னி சிறப்பு மருத்துவரும் இல்லாத மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்துள்ளது போன்ற பல்வேறு காரணங்களை காட்டி மருத்துவமனைகள் ஊழலில் ஈடுபட்டுள்ளன.
அதோடு சில மருத்துவமனைகள், சாதாரண சளி பிரச்சனைக்கு வந்தவர்களைக்கூட அவர்களுக்கு கொடிய நோய் உள்ளது என்று கணக்கில் காட்டியுள்ளன. வேறு சில மருத்துவமனைகள், வேறு எங்கோ செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளை தங்கள் மருத்துவமனைகளில் செய்ததாகவும், நல்ல உடல் நலத்தில் இருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ததாக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது என்று பல்வேறு வகைகளில் ஊழலில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேசிய நல ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை தேவைதானா என்பதை உறுதி செய்ய திடீரென தங்கள் குழுவுடன் ஆய்வுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவசர இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நோயாளியை பார்த்த ஆய்வுக்குழுவினர், அந்த நோயாளி ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஒருவரால் எப்படி ஸ்கூட்டி ஓட்ட முடியும் என்று குழம்பிய அதிகாரிகள், இந்த அறுவை சிகிச்சைக்காக 90,000 ரூபாய் கேட்டு மருத்துவமனை அனுப்பியிருந்த கோரிக்கையை நிராகரித்தனர். அதோடு, அவசர இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட நோயாளி இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உபகரணங்களை விற்பனை செய்பவர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
டேராடூனில் உள்ள எலும்பு சிகிச்சை மருத்துவமனையில், அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு கால் மூட்டில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை, தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. அந்த நோயாளிக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தொற்று ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாக பரிந்துரைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அடல் ஆயுஷ்மான் திட்ட அதிகாரிகள், அந்த மருத்துவமனையை இத்திட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.
மருத்துவமனைகளால் வைக்கப்பட்ட மருத்துவ கோரிக்கைகளும், கண்டுபிடிக்கப்பட்ட சில ஊழல்களும்...
ஊழல் 1:
உடனடியாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.
செய்யப்பட்ட ஊழல்:

அவசர இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய நோயாளி ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 90,000 ரூபாய் கோரியிருந்த மருத்துவமனையின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.
ஊழல் 2:
14 மணி நேரத்தில் 12 அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவர்கள் கணக்கு காட்டியுள்ளனர். அதோடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 12 நோயாளிகளை நேரடியாக ஐசியுவிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
செய்யப்பட்ட ஊழல்:
நோயாளிகள் ஐசியுவில் இருந்து நேரடியாக டிஸ்சார்ஜ் செய்யப்படமாட்டார்கள். மருத்துவர்களின் கண்காணிப்பில் சில நாட்கள் இருந்த பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
அதோடு, அந்த 12 அறுவை சிகிச்சையையும் 14 மணிநேரத்தில் ஒரே ஒரு மருத்துவர்தான் செய்தார் என்று கூறப்பட்டிருந்தது.

ஊழல் 3:
30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்று 24*7 அவசர சிகிச்சைப்பிரிவு கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தது.
செய்யப்பட்ட ஊழல்:
அந்த மருத்துவமனையில் பணியில் இருப்பது ஒரே ஒரு மருத்துவர் தான். அந்த மருத்துவமனைக்கு உரிமையாளரும் அவர்தான். அதோடு, அவர் காசிபூரில் செயல்பட்டுவரும் வேறு ஒரு அரசு மருத்துவமனையிலும் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். 2,72,600 ரூபாய் கேட்டு ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் கோரிக்கை வைத்திருந்தது.
ஊழல் 4:
45 நாட்களில் 38 அவசர கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் எல்லா அறுவை சிகிச்சைகளையும் 9:30 மணிக்கு மேல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
செய்யப்பட்ட ஊழல்:
கேட்டராக்ட் அறுவை சிகிச்சை அவசரமாக செய்யப்பட வேண்டியது இல்லை.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 150 மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 5.37 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை பாஜக அரசு நீட்டிக்கும் முயற்சியில் இருக்கிறது.  கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவுகூறும் விதமாக இத்திட்டத்திற்கு அடல் ஆயுஷ்மான் யோஜனா என்று உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பெயரிட்டார். மேலும் இத்திட்டத்தின் கீழ் 18 லட்சம் மக்கள் கொண்டுவரப்படுவார்கள் என்றும் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின் நோக்கத்தை விரிவு செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகள் அதிக ஊழலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மருத்துவமனைகள் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த அதிகாரிகள் இத்திட்டத்தின் கீழ் வரும் நிதிகளை மருத்துவமனைகள் சூறையாடுவதை கண்டுபிடித்தனர். இதுபோல மோசடியில் ஈடுபட்ட 7 மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவும், 12 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டிசும் அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மட்டுமல்லாது உத்தரபிரதேசத்திலும் தனியார் மருத்துவமனைகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்த்தில் 1,843 மருத்துவமனைகளில் இத்திட்டத்தில் பயனடையலாம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் 27 மருத்துவமனைகளுக்கு மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. 4 மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சரன்பூரில், போலி ஆயுஷ்மான் திட்ட அட்டைகளை தயாரிக்கும் கும்பல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆக்ராவில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியில்லாதவர்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டைகள் செல்லாததாக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியால் பலகோடி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டத்தை, தனியார் மருத்துவமனைகள் ஊழல் செய்யப்பயன்படுத்திக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

credit ns7.tv