சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதையடுத்து, 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 நாட்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மருத்துவத் தேவை தவிர பிற தேவைக்காக வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகைக் கடைகள், நடமாடும் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த முழு ஊரடங்கின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, 2 கிலோ மீட்டர் சுற்றளவு தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதித்துள்ளபடி மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் 33% பணியாளர்கள் வேலைக்குச் செல்லும் போது அடையாள அட்டையை கண்டிப்பாக காட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே பணிசெய்யும் பணியாளர்கள் தினசரி பணிக்காக சென்னை பெருநகராட்சி எல்லைக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.