ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

இரண்டாவது முறையாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை,

Bashaarat Masood , P Vaidyanathan Iyer

பொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் இரண்டாவது முறையாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மூன்று மாதங்கள் நீட்டித்தது.

வீட்டுக் காவலை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் தற்போது எதுவும் இல்லை என்று நிர்வாகத்தின் ஒரு தரப்பினர் கருதி வரும் வேளையில், இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரே அரசியல் தலைவர் மெகபூபா முப்தியின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்துறை செயலாளர் ஷலீன் கப்ரா பிறப்பித்த உத்தரவில், “சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, வீட்டுக்காவலை நீட்டிப்பது அவசியம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் மெகபூபா முப்தியின் தற்போதைய வீட்டுக் காவல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியோடு காலாவதியாகிறது .

“எந்த அரசியல் தலைவரும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  இல்லை … அவர் விடுதலை செய்யப்படுவதால் பிரச்சனை வரும் என்று நாங்கள்  எதிர்பார்க்கவில்லை” என்று பெயர் குறிப்பிட விரும்பாத  அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார். பின்னர், ஏன் முப்தியின் வீட்டுக் காவல் நீட்டிக்கப்படுகிறது என்று கேள்விக்கு, ​​அந்த அதிகாரி “ ஸ்ரீநகரை விட புது தில்லிக்கு மிகவும் பொருத்தமான கேள்வி,” என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டி,  முப்தியின் தடுப்புக்காவல் நீட்டிப்பு அரசியல் சார்ந்த முடிவு என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார் . காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னதாக, வீட்டுக் காவலில் இருந்து (அதுவும், பக்ரீத் அன்று)  விடுவிப்பது அனைத்து தரப்பினருக்கும்  ஒரு  சாதகமான கருத்தை அனுப்பியிருக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

 

சில அதிகாரிகள், “நீட்டிப்பு  உத்தரவு வழக்கமானது என்றும், மூன்று மாதங்கள் கட்டாயம் காவலில் வைக்கப்படவேண்டும் என்று அர்த்தமல்ல” எனத் தெரிவித்தனர் . தேசிய மாநாட்டுக் கட்சியின்   ஃபாரூக் அப்துல்லா (இரண்டு வாரங்கள்), மகன் ஒமர் அப்துல்லா (ஆறு வாரங்கள் ) இருவரும் வீட்டுக்காவல் முடிவடையும் நாட்களுக்கு முன்னதாக  விடுவிக்கப்பட்டனர்.

இந்த, நீட்டிப்பு உத்தரவு எனது தாய்க்கு அரசாங்கம் அளித்த “பக்ரீத் பரிசு” என்று முப்தியின் மகள் இல்டிஜா முப்தி தெரிவித்தார். “எங்களின் கவுரவம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதல் தொடர்பான தனது தாயின் வெளிப்பாடை இந்த உத்தரவு மாற்றியமைக்காது” என்றும் தெரிவித்தார்.

 

 

 

கடந்த ஆண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலத்தை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட  நாளான ஆகஸ்ட் 5 அன்று மெகபூபா முப்தி (61) கைது செய்யப்பட்டார். அடுத்த, ஆறு மாதங்கள்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா  மீது கடுமையான பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

கட்சிக் கொடியில் இருந்த பச்சை நிறம்,  கட்சியின்ப் சின்னம், 1987 ல் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லீம் யுனைடெட் ஃப்ரண்ட் (எம்.யு.எஃப்) கட்சியோடு ஒத்துப்போவது, 370-வது பிரிவு  ரத்து செய்யப்பட்டது குறித்து பேசமாட்டேன் என்று பத்திரத்தில் கையெழுத்திட மறுத்தது,  போன்றவைகளை ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் தடுப்புக்காவலுக்கான காரணங்களாக தெரிவித்தது.

மார்ச் 24 அன்று  உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்ட நிலையில் , முப்தி தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டார். ஏப்ரல் 7 அன்று, அரசு இல்லத்தில் இருந்து, குப்கர் சாலையில் துணை சிறையாக அறிவிக்கப்பட்ட தனது அதிகாரபூர்வ, வீட்டிற்குக்கு  மாற்றப்பட்டார். அவரின், முதல் வீட்டுக்காவல் உத்தரவு கடந்த மே 5 அன்று காலாவதியானது. பின்னர், நீட்டிப்புக் காலம்  மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய இல்டிஜா முப்தி, தனது தாயார் பக்ரீத் அன்று விடுவிக்கப்படுவார் என்று நம்பியதாக தெரிவித்திருந்தார். “அரசியல் தலைவர்கள் படிப்படியாக  விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.  பக்ரீத் அன்று அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கேள்விப்பட்டேன். ஆனால் இன்று பக்ரீத் பரிசாக, அவர்கள் (அரசு) இந்த புதிய உத்தரவை  எங்களுக்கு வழங்கியுள்ளனர், ”என்று இடிஜா கூறினார்.