12 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 4 நாட்கள் சிறப்பு சலுகை விலையில் விமான டிக்கெட்கள் வழங்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறைந்த விலை விமான சேவை அளிக்கும் நிறுவனமாக அறியப்படும் இண்டிகோ, 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது வரும் ஆகஸ்ட் 4ல் கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று (ஜூலை 10) முதல் ஜூலை 13ஆம் தேதி வரை சிறப்பு விலை சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 1,212 ரூபாய் முதல் விமானக் கட்டணம் தொடங்குகிறது. மொத்தம் 12 லட்சம் இருக்கைகள் இச்சலுகை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி ஜூலை21 2018, முதல் மார்ச்30 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் வாடிக்கையாளர்கள் பயணிக்கலாம். உள்ளூர் மட்டுமல்லாது, வெளிநாட்டு வழித்தடங்கள் உட்பட அனைத்து வழித்தடங்களுக்கும் இச்சலுகை திட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சலுகை திட்டத்தில் சில நிபந்தனைகளையும் அந்நிறுவனம் விதித்துள்ளது, அதன்படி ஒவ்வொரு சேவையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீட்கள் மட்டுமே இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படும், இந்த சலுகை சீட்கள் இல்லாத பிற சீட்களுக்கு வழக்கமான விலையே விதிக்கப்படும், ஒருமுறை வாங்கிய டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டால், டிக்கெட்டுக்கான முழு தொகை திரும்பக்கிடைக்காது.
இந்நிலையில், ஏர் ஏசியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனங்களும் இதே போல சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.