கேரள மாநிலத்தின் கடலோர நகரமான கோழிக்கோட்டிலிருந்து 10 கிமீ தூரம் தொலைவில் உள்ளது பெய்போர், இது ஒரு பண்டைய துறைமுக நகரமாகும்.
மலையாள மொழியில் ‘உரு’ அல்லது ‘தோவ்ஸ்’ என்றழைக்கப்படும் கைகளாலேயே தயாரிக்கப்படும் உலகின் மிகப்பெரிய படகுகள் இந்த நகரத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன என்பது இந்நகரத்திற்கு பெருமை சேர்க்கிறது. கைகளால் வடிவமைக்கப்படும் உலகின் பெரிய பொருளும் இந்த உரு படகுகளே என்பது சிறப்பான ஒன்றாகும். இந்த படகுகள் 200 அடி உயரமும், 1500 டன் எடை கொண்டதாகவும் உள்ளது.
பண்டைய காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க மெசபடோமியா பிரதேசத்துடன் இந்தியாவின் ஆரம்ப கட்ட கடல் வாணிபம் தொடங்கிய காலத்தில் இந்த உரு படகுகள் தயாரிக்கும் கலை கேரளாவிற்கு பரவியதாக சொல்லப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றிய இந்த கலை இன்றளவும் இப்பகுதி மக்களால் உயிர்ப்புடன் திகழ்கிறது. அருகாமையில் இருக்கும் நிலம்பூர் பகுதி காடுகளில் உள்ள தேக்கு மரங்களால் இந்த பெரியளவிலான படகுகள், எந்தவித இயந்திய உதவிகளுமின்றி வெறும் கைகளால் வடிவமைக்கப்படுகின்றன. சிறிய வீடுகள் கூட தற்போது வரைபடங்கள் உள்ளிட்ட திட்டமிடுதலின்றி கட்டப்படுவதில்லை, ஆனால் ஆச்சரியத்தக்க வகையில் இந்த உரு படகுகள் எந்தவித திட்டமிடுதலுமின்றி கச்சிதமாக கலைநயத்துடன் செய்து முடிக்கப்படுவது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஹவுஸ் போட்கள், ஆடம்பர படகுகள், உணவு விடுதிகள் போன்று தனித்துவம் வாய்ந்த உரு படகுகள் தயாரித்து அளிக்க ஆர்டர்கள் குவிந்து வருவதால் இத்தொழில் தற்சமயம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறது. இந்த வகை படகுகளுக்கு அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. உரு படகு ஒன்றை கட்டுமானம் செய்ய 40 முதல் 50 பணியாளர்கள் உழைப்பு தேவைப்படும், படகு ஒன்றினை கட்டமைக்க அதன் அளவு மற்றும் வசதிகளை பொருத்து 1 முதல் 4 ஆண்டுகள் காலம் தேவைப்படும்.
நவீன இயந்திரங்கள் உதவியின்றி பாரம்பரியம் வாய்ந்த இந்த படகு தயாரிப்பு முறை இன்றளவும் உயிர்புடன் திகழக் காரணமான திறமைமிக்க அந்த உழைப்பாளர்களின் உழைப்பு போற்றப்படத்தக்கதாகும்.