8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 600 கிலோ எடை கொண்ட கொலைகார ராட்சச முதலை ஒன்று தற்போது பிடிபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள Katherine என்ற நகரில் உள்ள நீர்நிலை ஒன்றில் ராட்சச முதலை ஒன்று கடந்த 2010ஆம் ஆண்டு, முதன் முதலாக தென்பட்டது.
இந்த முதலை அப்பகுதியில் பல மனிதர்களை வேட்டையாடியதால் கொலைகார மிருகமாக கருதப்பட்டது, இதனை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். எனினும் சற்றும் சளைக்காத இந்த முதலை அனைவர் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு சாதுர்யமாக தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வந்தது.
இந்நிலையில் 8 ஆண்டுகள் தீவிரமான தேடுதல் வேட்டைக்குப் பின்னர் தற்போது இந்த முதலை வனத்துறையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
4.7 மீட்டர் நீளம், சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த முதலைக்கு 60 வயது இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. Katherine நகரில் இருந்து 60 கிமீ தூரத்தில் உள்ள ஓடையில் பிடிக்கப்பட்டுள்ள இந்த முதலை உப்பு நீர் முதலையாகும்.
கடந்த சில ஆண்டுகளில் இந்த முதலையை பிடிக்க படாதபாடுபட்டதாக மூத்த வனத்துறை அதிகாரி ஜான் புர்கே கூறியுள்ளார். எடை அதிகம் கொண்டிருந்ததால் இதனை தண்ணீரீலிருந்து வெளியே கொண்டு வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டதாகவும், இவ்வளவு பெரிய அளவிலான முதலை இது வரையில் பிடிபட்டது இல்லை என்பதால் எங்களுக்கு இந்த முதலை மீது மரியாதை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிடிபட்ட ராட்ச்ச முதலையானது முதலை பன்னை ஒன்றில் பிற முதலைகளிடமிருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியானது முதலைகள் மிகுந்த பகுதியாகவும், மனிதர்களை வேட்டையாடும் முதலைகள் நிறைந்ததாகவும் உள்ளது. வருடந்தோரும் இவ்வகையான மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் 250க்கும் மேற்பட்ட முதலைகள் நீர்நிலைகளிலிருந்து பிடிக்கப்பட்டு பன்னைகளில் சேர்க்கப்படுவதாகவும் வனைத்துறையினர் தெரிவித்தனர்.